ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் அடுத்தடுத்த முற்றுகையால் ஈரோடு கிழக்கு நகரம் விழாக் கோலம் பூண்டு காட்சி அளிக்கிறது.
அரசியல் தலைவர்களை வரவேற்க கொடிக் கம்பம் நட்டுதல், பேனர் வைப்பது உள்ளிட்ட பணிகள் ஓயாமல் நடைபெற்று வருகின்றன. இதனால் உள்ளூர் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கிய பாதாள சாக்கடை, புதைவட மின்கம்பி பதிக்கும் பணி என பல்வேறு பணிகளுக்காக அப்போது தோண்டிய குழிகளே இன்னும் சரிவர மூடப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, புதியதாக ஆட்சிக்கு வந்த திமுக சாலைகளை அமைக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத நிலையே ஈரோட்டில் நீடித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் 27ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், வேட்பாளர்களை ஆதரித்து ஈரோடு நகரில் நடைபெறும் பிரசாரங்களுக்கு சாலையின் இரண்டு பக்கத்திலும் இயந்திரங்களை கொண்டு துளையிட்டு கொடிகளை நடும் பணி நடைபெறுகின்றன.
ஓரளவு நல்ல நிலையில் இருக்கும் சாலையை பிரசாரத்திற்காக கொடி கம்பம் நட, துளையிட்டு குண்டும் குழியுமாக மாற்றுவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் நட்டியதில் சாலை சேதமாவது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: Viral video: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… வீடு வீடாக குக்கர் தரும் காங்கிரசார்