ஈரோடு: பெருந்துறை பகுதியில் 2021-ல் செந்தில்குமார் என்ற கார்த்திக்கை(30) தனிப்படை போலீசார் பைக் திருட்டு வழக்கில் கைது செய்துள்ளனர். அப்போது தனிப்படை போலீஸ் ராஜீவ்காந்தி என்பவர், போலீசிடம் சிக்காமல் திருடுவது எப்படி என்று அவருக்கு ஆலோசனை வழங்கியது தெரிய வர ராஜீவ் காந்தி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் கடந்தாண்டு சிறையில் இருந்து வெளியே வந்த கார்த்திக்கிடம் சில மாதங்களுக்கு முன்பு போலீஸ்காரர் ராஜீவ் காந்தி, பெருந்துறையில் சிசிடிவி இல்லாத பகுதிகள் குறித்து தெரிவித்து, போலீசிடம் சிக்காமல் திருடத் திட்டம் போட்டு கொடுத்துள்ளார். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ராஜீவ் காந்தி ஒரு சிறிய மளிகை கடையைத் துவங்கி அங்கு கார்த்திக்கை வைத்து, தனது திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். கார்த்திக் அவருக்கு உதவியாக மதுரையைச் சேர்ந்த கருப்பசாமி, பாலசுப்பிரமணியம் என இருவரை சேர்த்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் சந்தேகப்படும்படியான ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதாபேகமுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர், போலீசார் விசாரித்ததில் மளிகை கடையில் இருந்து கொண்டு வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் மதுரை மேலூர் கருப்பசாமி (31), மணிகண்டன் என்கிற பாலசுப்பிரமணி (42) ஆகியோரையும், அவர்களுக்கு மூளையாக செயல்பட்ட காவலர் ராஜீவ் காந்தியையும் பெருந்துறை போலீசார் கைது செய்தனர். சித்தோட்டில் நடந்த கொள்ளையில் தொடர்புடைய, திசையன்விளை, மகாதேவன்குளம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்கிற கார்த்திக் (30)யை சித்தோடு போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 28 பவுன் தங்க நகை, கொள்ளை அடிக்கப் பயன்படுத்திய கார், இரண்டு பட்டாக்கத்தி, அரிவாள் மற்றும் பெண்கள் உடைகள் ஆகியவற்றை பெருந்துறை மற்றும் சித்தோடு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், காவலர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட நான்கு பேரையும் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின் பேரில் கோபிசெட்டிபாளையம் சிறையில் அடைத்தனர்.
கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் ராஜீவ்காந்தி 2009-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை திருப்பூரில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்துள்ளார். பின்னர், ஈரோடு மாவட்டம், பெருந்துறை குற்றப்பிரிவில் முதல் நிலை காவலராகவும், அதன் பின்னர் தற்போது ஆயுதப்படையில் காவலராகவும் பணிபுரிந்து வந்துள்ளார்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக காவலரே வழிப்பறி கொள்ளையர்களுடன் கைகோர்த்து குற்றச் சம்பவங்களுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்து பல லட்சங்களை சம்பாதித்து மாட்டி கொண்ட சம்பவம் பெருந்துறை, சித்தோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெப்பர் ஸ்பிரே அடித்து ரூ.50 லட்சம் வழிப்பறி - கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?