ஈரோடு: சத்தியமங்கலத்தை அடுத்த ஓலக்காரன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (75). இவரது மனைவி துளசிமணி(68). இந்நிலையில், துளசி மணியை கடந்த நான்கு நாள்களாக காணவில்லை என்பதால், சந்தேகம் அடைந்த கிராம மக்கள், ஆறுமுகத்தின் விவசாய தோட்டத்திற்கு சென்றனர். அப்போது அங்கு துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து கிராம மக்கள் வருவாய் துறையினருக்கும், பவானிசாகர் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அங்கு சென்ற காவல்துறையினர் ஆறுமுகத்திடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அக்டோபர் 14 ஆம் தேதி துளசிமணி தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்த போது வலிப்பு வந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக தெரிவித்துள்ளார்.
விஜயதசமி அன்று தனது மனைவி இறந்ததாக ஊருக்குள் கூறினால் யாரும் அடக்கம் செய்ய வரமாட்டர்கள் என நினைத்து, தானே தோட்டத்தில் குழியை தோண்டி மனைவியை அடக்கம் செய்ததாகவும் ஆறுமுகம் கூறினார்.
![v](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13404548_thu.jpg)
இதையடுத்து பெரிய கள்ளிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மோகன் அளித்த புகாரின் பேரில் விவசாயி ஆறுமுகத்திடம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சம்பவம் நடந்த விவசாய தோட்டத்தில் வருவாய்த்துறையினர் முன்னிலையில், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ குழுவினர் துளசிமணியின் உடலை தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
உடற்கூராய்வு அறிக்கைக்கு பின்னரே துளசிமணி மரணம் இயற்கையா அல்லது கொலையா என்பது தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தண்டவாளத்தில் தவறி விழுந்த முதியவர்...காப்பாற்றிய ரயில்வே போலீஸ்