ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தங்களது குறைகள், கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க புகார், கோரிக்கை மனுக்கள் வழங்கி வருகின்றனர்.
இந்த கரோனா காலத்தில் பெறப்படும் மனுக்களை விசாரிப்பதில் கட்டுப்பாடுகளும், அரசு விதிமுறைகளைக் கடைப்பிடித்திட வேண்டுமென்கிற நெறிமுறைகளும் இருப்பதால், ஈரோடு மாவட்ட காவல் துறை மனுதாரர்கள் வழங்கிய மனுக்கள் மீது மனுதாரர்களிடமும், மனுதாரர்கள் குற்றஞ்சாட்டியவர்களின் வீடுகளுக்கும் நேரடியாக சென்று விசாரணை மேற்கொள்ளும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த திட்டம், மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இன்று முதல் (அக்.6) தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கருங்கல்பாளையம் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான காவலர்கள், புகார் மற்றும் கோரிக்கை மனுக்களை வழங்கிய 10க்கும் மேற்பட்ட மனுதாரர்களின் வீடுகளுக்கும், மனுதாரர்கள் புகார் கூறியவர்களின் வீடுகளுக்கும் நேரடியாகச் சென்றும் விசாரணை மேற்கொண்டனர்.
மனுவின் மீது முழுமையான விசாரணைக்கு பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தாக்கல் செய்யப்படும் இறுதி அறிக்கையின்படி இறுதி முடிவு எடுக்கப்படும்.
இந்த மனுக்கள் மீதான நேரடி விசாரணை, மாவட்டம் முழுவதும் 100க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று நடைபெற்றுள்ளதாகவும், குறுகிய காலத்திற்குள் மனுக்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் அனைத்துத் தரப்பினரிடமும் இந்த முறை வரவேற்பும், பாராட்டும் பெற்றுள்ளது.
இதனையும் படிங்க : இ-சேவை மையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு