ஈரோடு: தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா, போதை மாத்திரை உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு சமீப காலமாக கடும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றையும் மீறி போதை ஊசி பயன்படுத்தும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு அதிகரிப்பது ஏன்? அந்தியூரில் நடந்தது என்ன? என்ற குற்றமும், பின்னணியும் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
அந்தியூரில், நேற்று (ஜூலை 20ஆம் தேதி) இரவு தனியார் பள்ளி ஒன்றின் அருகே உள்ள காலி இடத்தில் இளைஞர்கள் கும்பலாக போதை மருந்துகளை வைத்து உபயோகப்படுத்துவதாக அந்தியூர் போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. கிடைத்த அந்த ரகசிய தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அந்தியூர் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் தலைமையிலான போலீசார் அங்கிருந்த கும்பலை சுற்றி வளைக்க முயன்றனர்.
அப்போது, அந்த கும்பலில் இருந்த இருவர் தப்பி ஓடி விட்டனர் எனவும், 5 பேர் மட்டும் சிக்கிக் கொண்டனர் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அந்த 5 பேரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் அந்தியூர் சந்தியபாளையம் பகுதியைச் சேர்ந்த சௌந்தரராஜன்(20), செம்புளிச்சாம்பாளையம் பாளையம் பகுதியை சேர்ந்த மகாதேவன்(23), தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பூபேஷ் (22), மகேஸ்வரன் (24) மற்றும் வெங்கடேஷ்(22) என தெரியவந்துள்ளது.
மேலும் தப்பியோடிய நபர்கள் ஆப்பக்கூடல் பகுதியைச் சேர்ந்த பாலாஜி மற்றும் திருமூர்த்தி என்ற தகவலும் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து சுமார் 1 லட்சம் மதிப்புள்ள 2500 போதை மாத்திரைகளையும், ரொக்கமாக ரூ.21 ஆயிரத்து 600 மற்றும் 2 இருசக்கர வாகனங்கள், 3 செல்போன்கள், போதைக்காக பயன்படுத்திய சிரிஞ்சுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக போதை ஊசி மற்றும் மாத்திரைகள் பயன்படுத்தும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் போதை ஊசி பயன்படுத்தும் நபர்கள் மாலை நேரங்கள் மற்றும் இரவு நேரங்களில் ஒன்று கூடி சிரிஞ்சு மூலம் வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து அவைகளை தங்களது உடலில் செலுத்தி அதில் ஏற்படும் ஒருவித போதையினால் உலவி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
தற்பொழுது போலீசாரிடம் சிக்கிய நபர்கள் மட்டுமல்ல, இன்னும் பல்வேறு நபர்கள் வலி நிவாரணி மாத்திரைகளை போதை ஊசிகளாக பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களையும் காவல்துறையினர் விரைந்து கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ய வேண்டும். தற்போது சீரழிந்து வரும் இளைஞர் சமூகத்தை நல்வழிப்படுத்த காவல்துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: Manipur video: 4 பேர் கைது - குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க அரசு பரிசீலனை