ஈரோடு: சென்னிமலை அருகே உள்ள கரியாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முத்துச்சாமி. இவரது மனைவி சாமியாத்தாள். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூன்று மகள்களுக்கும் திருமணமான நிலையில் வயதான தம்பதியினர் இருவரும் ஊருக்கு வெளியே உள்ள அவர்களது தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று (செப்.09) காலை அவர்களது பேரன் அஜித் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர். இது குறித்து அஜித் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜவகர், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் உள்ளிட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகள் குறித்த தடயங்களை சேகரித்து வருகின்றனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வயதான தம்பதினர் இருவரையும் இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக அடித்து கொலை செய்தது தெரியவந்தது. சாமியாத்தால் அணிந்திருந்த தாலிக் கொடி உள்ளிட்ட 16- சவரன் தங்க நகைகள் மற்றும் 60 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளைப் போனது தெரியவந்தது.
தொடர்ந்து, சென்னிமலை காவல் நிலைய காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் சடங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: காரில் கடத்திச் சென்று இளைஞர் வெட்டி கொலை.. என்ன காரணம்?.. தீவிர விசாரணையில் போலீஸ்!