ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையானது இந்திய அளவில் காச நோய் சிகிச்சை மருத்துவமனைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே மருத்துமனையில் செவிலியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக 40க்கும் மேற்பட்ட ஒப்பந்த மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், கடந்த சில மாதங்களாக இந்த மருத்துவமனை கரோனா தடுப்பு சிறப்பு மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக தங்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும் ஊதியத்தை வழங்கக்கோரியும் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து பேசிய அவர்கள், "பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டபோது ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவருக்கும் இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படும் என்றும், தொழிலாளர்கள் அனைவரும் எப்போதும்போல பேரிடர் காலங்களிலும் பணியாற்றிட வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
ஆனால் கடந்த மூன்று மாதங்களாக எங்களுக்கு ஊதியம் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்கினால் மட்டுமே பணிக்கு திரும்ப தற்போது முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்