ஈரோடு: கடந்த இரு தினங்களாக ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60ஆவது வார்டு வெண்டி பாளையம் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள ரயில்வே நுழைவு பாலத்தில் சுமார் 4 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
குறிப்பாக வெண்டிபாளையம் பகுதியில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்த மக்கள் இந்த நுழைவு பாலத்தை கடந்தே செல்ல வேண்டி உள்ளது. மேலும் இந்த நுழைவு பாலத்தின் வழியாக நாமக்கல் மாவட்டத்திற்கும் செல்லும் வாகனங்களும் சென்று வருவதால் தற்போது மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி இந்த இடத்தை ஆய்வு செய்தும் கூட இன்னும் மாநகராட்சியை சேர்ந்த அலுவலர்கள் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள் தொடர்ந்து இப்பகுதியை மட்டும் புறக்கணித்து வருவதாகவும் மழை வரும் போது ஒவ்வொரு முறையும் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.