தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பயன்பெறும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிக்கை வெளியானது. அதனடிப்படையில், ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட 60 வார்டுகளிலும் தனியார் பங்களிப்புடன் சமூகநல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
முதல்கட்டமாக வீரப்பன்சத்திரம் மண்டல அலுவலகம் முன்பு சமூகநல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மாநகராட்சிகுட்பட்ட திண்டல், சம்பத்நகர், ஆர்.என்.புதூர், சித்தோடு, பெரியஅக்ரஹாரம், மூலப்பாளையம், கொல்லம்பாளையம் உள்ளிட்ட 20 இடங்களில் குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டன. இந்தக் குடிநீர் நிலையம் மூலமாக 7 ரூபாய்க்கு 20 லிட்டர் குடிநீர் வழங்கப்படுவது குறிப்படத்தக்கது.
இந்நிலையில், நிலத்தடி நீரை சட்டவிரோதமாக உறிஞ்சி, குடிநீரை சுத்திகரிக்கும் தனியார் நிறுவனங்களை தடை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு 33 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால், ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் சமூகநல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களுக்கு குடிநீர் தேடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சமூகல நகுடிநீர் நிலையத்தில் ஒரு லிட்டர் ஒரு ரூபாய்க்கும், 7 ரூபாய்க்கு 20 லிட்டர் மினரல் வாட்டரும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு சென்டரிலும் 150 முதல் 200 பேர் வரை பயன்படுத்தி வருவதால், பயனாளர்களுக்கு வாட்டர் கார்டும் வழங்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி தங்களுக்கு தேவையான அளவிற்கு தண்ணீரைப் பெற்று வருகின்றனர்.
மேலும், மினரல் வாட்டர் நிறுவனங்களை அரசு கண்காணித்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சமூகநல சுத்திகரிப்பு குடிநீர் நிலையங்களின் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ’ரஜினி-கமல் கூட்டணி, கல்யாணமே ஆகாமல் குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்கு சமம்’