ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள காவிலிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் தனது தோட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல் தோட்டத்தில் ஆடுகளை கட்டி வைத்திருந்த நிலையில் இன்று காலை அவ்வழியே பைக்கில் வந்த 2 பேர் திடீரென பைக்கை நிறுத்திவிட்டு கட்டி வைத்திருந்த வெள்ளாட்டுக் கிடாயை பிடித்து பைக்கில் வைத்துக்கொண்டு தப்ப முயற்சித்தனர்.
இதைக்கண்ட நாகராஜ் கூச்சலிடவே பொதுமக்கள் ஓடிவந்து ஆடுகளை திருடிச் செல்ல முயன்ற இரண்டு பேரை பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பி ஓடினார். வெள்ளாட்டை திருடிய நபரை சுற்றிவளைத்து பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆடு திருடிய நபரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
போலீசார் விசாரணையில் ஆடு திருடிய நபர் திருப்பூர் மாவட்டம் கொட்ட காட்டுபாளையம் பகுதியை சேர்ந்த குமார் (42) என்பதும், ஆடு திருடுவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததோடு தப்பியோடிய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.பட்டப்பகலில் ஆடு திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சாலைப்புதூர் அரசு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 40 லட்சம் வேளாண்பொருட்கள் ஏலம்!