ஈரோடு திண்டல்மலை அருகேயுள்ள தெற்குப்பள்ளம் அருகே 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடைத் திட்டம், மின்சாரப் புதைகுழி திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பறிக்கப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததால், குண்டும் குழியுமாக அப்பகுதி சாலைகள் காணப்படுகின்றன.
மேலும், தெற்குப்பள்ளம் பகுதியில் கடந்த பல மாதங்களாகவே குப்பைகள் முறையாக அள்ளப்படாமலும், சாக்கடைகள் சுத்தப்படுத்தப்படாத நிலையிலும் உள்ளன. சாக்கடைகள் உரிய முறையில் சுத்தம் செய்யப்படாததால் கழிவு நீர் வெளியே செல்ல முடியாமல் சாக்கடைகள் நிரம்பி, கழிவுநீர் சாலைகளில் குட்டைகள் போல் தேங்கி விடுவதாகவும், பல சமயங்களில் வீடுகளுக்குள் கழிவுநீர் நுழைந்து விடுவதாகவும், கழிவுநீர் சாலைகளில் தேங்குவதால் அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு வழிவகுப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.
மாநகராட்சி நிர்வாகம் இவற்றை முறையாக சுத்தம் செய்திட வேண்டுமென்றும், சாலைகளை சீரமைத்திட வேண்டும் என்றும் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள் சாலைகளில் நாற்று நட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயன்பாடற்ற சாலைகள் இதற்காகவேனும் உதவட்டும் என்று தாங்கள் நாற்று நடுவதாக அப்பகுதி மக்கள் இதுகுறித்து தெரிவித்தனர். மேலும் இந்தப் போராட்டத்திற்குப் பிறகாவது தங்களது கோரிக்கையை எற்று சாலையை சீரமைக்க வேண்டும் என்றும், குப்பைகளை அகற்றி சாக்கடைகளை சுத்தம் செய்யாவிடில், தெற்குப்பள்ளம் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பெருந்துறை சாலைப் பகுதியில் மிகப்பெரிய மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.