ஈரோடு: சத்தியமங்கலத்தை அடுத்த கேர்மாளம் அடர்ந்த வனப்பகுதியில் குளியாடா, மாவள்ளம், குறிமந்தை, கோட்டாடை மலைகிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக ஆசனூர், சத்தியமங்கலம் போன்ற நகர்பகுதிளுக்கு செல்ல வேண்டி நிலையிலேயே இன்றளவும் உள்ளனர். மேலும், இங்குள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்றால் ஆசனூர், தாளவாடிக்கு செல்ல வேண்டி உள்ளது.
இப்படி அத்தியாவசிய மற்றும் அன்றாட தேவைகளுக்குக் கூட அல்லாடி வரும் இந்த மக்கள், பெரும்பாலும் அரசு பேருந்தையே நம்பி இருக்கின்றனர். ஆனால் கேர்மாளம் பிரிவு முதல் கோட்டாடை, குளியாடா வரை தார் சாலை வசதி இல்லாமல் செம்மண் சாலையாக இருப்பதால், மழை காலங்களில் அடிக்கடி அரசு பேருந்து சேற்றில் சிக்கி, பழுதாகி விடுகிறது.
இதன் காரணமாக, பேருந்து இயக்குவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு, அப்பகுதியில் பேருந்து சரிவர இயக்கப்படாததாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும், சாலை வதியில்லாத காரணத்தால் அங்கு விளையும் பொருள்களை சத்தியங்கலம் போன்ற நகர் பகுதியில் சந்தைப்படுத்த முடியாமலும் தவித்து வருகின்றனர்.
இவ்வாறு சரியான சாலை வசதி இல்லாத காரணத்தால், இந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி பள்ளி குழந்தைகளின் படிப்பும் இதனால் பாதிக்கப்படுவதாக அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், அரசின் கவனத்திற்கு இவர்களின் வேதனையை கொண்டு சேர்க்க அப்பகுதி பள்ளி மாணவ, மாணவியர் உட்பட 500க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கேர்மாளம் - அரேப்பாளையம் சந்திப்பில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கேர்மாளம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தாளவாடி வட்டாட்சியர் ரவிசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜன், ஆசனூர் ஊராட்சித் தலைவர் சுப்பிரமணியம், வனத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், சாலை வசதி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து மறியல் போராட்டமானது கைவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்பைடர் மேன் போல் மாடிக்கு மாடி தாவிய கொள்ளையன்.. ஜோஸ் ஆலுக்காஸ் வழக்கில் கோவை துணை ஆணையர் சந்தீஸ் அளித்த பிரேத்யேக தகவல்!