ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், தேசிபாளையம் ஊராட்சியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், புங்கம்பள்ளி ஓடையில் நீர் வீணாகுவதைத் தடுப்பதற்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் திட்டம்) கீழ் 2020ஆம் ஆண்டு 7.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டது.
புங்கன்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்யும் மழை நீர், இந்த தடுப்பணைக்கு வந்து சேரும். கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து தடுப்பணை நிரம்பி வழிந்தது. ஆனால், தடுப்பணை அதிகப்படியான தண்ணீரின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் உடைந்துள்ளது.
இதனால் தடுப்பணையில் உள்ள தண்ணீர் முழுவதும் வீணாக வெளியேறி, தற்போது தடுப்பணை நீரின்றி வறண்டு காணப்படுகிறது. தடுப்பணை உடைந்து தண்ணீர் வெளியேறும்போது நீரின் வேகம் காரணமாக தடுப்பணையின் தரைத்தளத்தின் கான்கிரீட் பெயர்ந்து முற்றிலும் சேதமடைந்தது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, “தடுப்பணை தரமின்றி கட்டும்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். அதை ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவாக, தற்போது தடுப்பணை உடைந்து சேதம் அடைந்துள்ளது. மேலும், மழைநீர் வீணாக ஆற்றில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் ஊராட்சி நிர்வாகம், இந்த தடுப்பணையை புதுப்பித்து நீர் தேக்கி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர். மேலும், இது குறித்து பவானிசாகர் கிராமப்புற வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி கூறுகையில், வெள்ளத்தால் சேதமடைந்த தடுப்பணையை பார்வையிட்டு, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: ஈரோடு ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டத்தில் கல் வீச்சா? - நடந்தது என்ன?