ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமங்களுக்கு சத்தியமங்கலத்தில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளும், ஒரு தனியார் பேருந்தும் இயக்கப்படுகிறது.
இம்மலைப்பகுதியில் உள்ள அரிகியம், மாக்கம்பாளையம், கோம்பைத்தொட்டி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வனப்பகுதியில் உள்ள மண்சாலையின் வழியாக சென்று குரும்பூர் பள்ளம், சக்கரைப்பள்ளம் என இரண்டு பள்ளங்களைக் கடந்து செல்லும் சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரகாலமாக கடம்பூர் மலைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் இந்த இரண்டு பள்ளங்களிலும் செந்நிறத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மண்சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. இதனைத் தொடர்ந்து, கடம்பூர் - மாக்கம்பாளைம் கிராமத்திற்குச் செல்லும் அரசுப்பேருந்து குரும்பூர் பள்ளத்தைக் கடந்து அரிகியம் வரை மட்டுமே செல்கிறது.
சக்கரைப்பள்ளத்தில் அதிக அளவில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பேருந்து பள்ளத்தைக் கடக்கும் போது சேற்றில் சிக்கிக்கொள்ளும் அபாயமுள்ளது என்பதால் மாக்கம்பாளையம், கோம்பைத் தொட்டி உள்ளிட்ட நான்கு கிராமங்களுக்கு கடந்த ஒருவார காலமாகப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதனால் நான்கு கிராம மக்களும் தங்களது அத்தியாவசியப் பொருட்களை வாங்க கடம்பூர் செல்ல முடியாமலும், மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவர்கள் கடம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த இரண்டு பள்ளங்களின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்றும், வனப்பகுதியில் உள்ள மண் சாலையை தார்ச்சாலையாக தரம் உயர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாக்கம்பாளையம் கிராம மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!