ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயிகள் மலைப்பகுதிகளில் மாடுகளை பயன்படுத்தி உழவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பழங்குடியினர் ஆடு வளர்ப்பு மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
தற்போது கரோனா நோய்த் தொற்று காரணமாக பொங்கல் பண்டிகையைக் கொண்டாட மக்கள் ஆர்வமின்றி உள்ளனர். மேலும் மக்களிடம் வருவாய் குறைந்துள்ளதால் பொங்கல் பண்டிகைக்குத் தேவையான பொருள்களின் விற்பனையும் மந்தமாக உள்ளது. பண்டிகையன்று, கால்நடைகளுக்கு அணிவிக்கும் அலங்காரப் பொருள்களான கயிறு, சலங்கை மற்றும் பிற பொருள்கள் ஆண்டுதோறும் தைப்பொங்கலுக்கு 10 நாள்களுக்கு முன்பாகவே விற்பனையாகிவிடும்.
ஆனால், தற்போது பொங்கலை முன்னிட்டு அமைக்கப்பட்ட சத்தியமங்கலம் வாரச்சந்தையில் கால்நடை அலங்காரப் பொருள்கள் மற்றும் விவசாயத்திற்கு தேவையான உபகரணங்கள் விற்பனையின்றி சந்தை கலையிழந்து உள்ளது. சந்தையில் தினந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய்வரை வியாபாரம் ஆன நிலையில் தற்போது சந்தையில் தற்போது 500 ரூபாய்க்குக்கூட விற்பனையாகவில்லை என வியாபாரிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
கரோனாவினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகள், செலவு செய்ய போதிய ஆர்வம் காட்டவில்லை. இதனால் அலங்காரப் பொருள்கள் விற்பனை மந்தமாக உள்ளது. மேலும், அலங்காரப் பொருள்களின் விலையும் 20 விழுக்காடு அளவிற்கு உயர்ந்ததால் விற்பனை மேலும் மந்தமாகியுள்ளது. பல்வேறு இடங்களிலிருந்து வேன் மூலம் கொண்டுவரும் பொருள்களுக்கு வாடகை செலவை ஈடுகட்ட முடியவில்லை எனவும் வியாபாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நெருங்கும் பொங்கல்: உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் 2 கோடி மதிப்பில் ஆடு விற்பனை