ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளாளபாளையம் செல்லும் வழியில் தனியார் பிஸ்கெட் தயாரிக்கும் நிறுவனத்தின் எதிர்புறம் தமிழ்நாடு மின்வாரியத் துறையின் உயரழுத்த மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மின்மாற்றி அருகில் மரத்திலிருந்து இரைதேடி பறந்து சென்ற ஒன்றரை வயது மதிக்கத்தக்க இரண்டு தேசிய பறவைகள் மின்மாற்றி அருகில் சென்ற உயரழுத்த மின்கம்பியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
இதனால் மின் மாற்றியில் பழுது ஏற்பட்டு அப்பகுதிக்கு மின்சாரம் தடைபட்டது. இதையடுத்து விரைந்துவந்த மின் வாரிய ஊழியர்கள் கம்பியில் சிக்கியிருந்த மயில்களை அப்புறப்படுத்தி மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை நீக்கி, மின் விநியோகத்தை சீர் செய்தனர்.
இது குறித்து அருகிலிருந்தவர்கள் டி.என்.பாளையம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறை ஊழியர்கள் மின் கம்பியில் சிக்கி உயிரிழந்த மயில்களை எடுத்துக்கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.