நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் பவானிசாகர் அணைக்கு, அதிகபட்சமாக 22 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து வந்தது. இந்நிலையில் 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை நள்ளிரவில் எட்டியது.
பொதுப்பணித்துறை விதிகளின்படி அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டும் போது, நீரைத் தேக்கி வைக்க இயலாது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் உபரி நீரை அப்படியே பவானிஆற்றில் திறந்துவிட வேண்டும்.
அதன்படி தற்போது அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளதால் அணையின் மேல் பகுதியில் உள்ள ஒன்பது மதகுகளின் வழியாக, ஐந்து கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து எட்டு ஆயிரம் கன அடி வரை நீர் திறந்து விடப்பட்டது.
முன்னதாக அணையில் சிறப்புப் பூஜைகள் செய்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு வரும் நீர்வரத்துக்கேற்ப, நீர் வெளியேற்றம் இருக்கும் எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து உள்ளாட்சி,வருவாய்த்துறை சார்பில் பவானிசாகர் கரையோரத்தில் தாழ்வான இடங்களில் வசிக்கும், அனைவரும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து வெள்ளநீர் திறந்துவிடப்பட்டதால் பவானிஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது
இதையும் படிங்க:
100 நாள் வேலைத்திட்டம்: ஊதியம் வழங்காததைக் கண்டித்து பணியாளர்கள் போராட்டம்