ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாகவும், 200க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் நாள்தோறும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தனியார் பங்களிப்புடன் தீவிர சிகிச்சைப் பிரிவு, விபத்து அவசரப் பிரிவு, மனநலப் பிரிவு, சிறுநீரகப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த ஏழுமலை என்கிற 55 வயது முதியவர் பணிநிமித்தமாக ஈரோடு வந்தவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதன் காரணமாக, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு இன்று (நவம்பர் 26) காலை வந்த அவர் தனது உடல்நிலை சரியில்லை என மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு மருத்துவர்கள் உள்நோயாளியாக அனுமதித்திட இடமில்லையெனக் கூறி அவருக்குரிய மாத்திரைகளை எழுதி பெற்றுக் கொள்ளுமாறு கூறி விட்டு மருத்துவமனை வெளிவாசல் பகுதியிலுள்ள மேம்பாலம் அருகே உறங்குமாறு அறிவுறுத்தினர்.
இதனால் குழப்பமடைந்த முதியவர், குணமடைய வேண்டுமென்பதற்காக மருத்துவர்கள் கூறியபடி சாலையோரத்தில் மழை பெய்து கொண்டிருந்த போதும் தான் கொண்டு வந்திருந்த துணியை விரித்துப் படுத்திருந்தார். இதைக்கண்ட அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் அவரிடம் விசாரித்தபோது, மருத்துவமனையில் இடமில்லாததால் வெளியே படுக்க வைத்துள்ளதாகத் கூறினார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்களுக்கு ஆட்சியர் செல்போனில் தொடர்புகொண்டு வெளியே படுத்துக் கிடக்கும் முதியவரை உள்நோயாளியாக அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, பல மணி நேரமாக மழைக்குளிரில் வாடிக்கிடந்த முதியவரை மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனைக்குள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க:'ஓட்டு கேட்க மட்டும் வருவார்கள்' - சாலை வசதி கோரும் நன்னிலம் மக்கள்