ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு அக்டோபர் 6,9 ஆதிய தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஒன்றியத்திற்குட்பட்ட புங்கார் ஊராட்சி முதல் வார்டு, நல்லூர் ஊராட்சி முதல் வார்டு ஆகிய 2 வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடத்துவதற்காக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வேட்புமனுக்கள் பெறப்பட்டன.
இதில் புங்கார் ஊராட்சி முதல் வார்டில் வார்டு உறுப்பினர் பதவிக்கு சுஜில்குட்டை பகுதியைச் சேர்ந்த அமுதா, மயிலாள் என இருவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், நேற்று (செப்.25) வேட்புமனு வாபஸ் பெற கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
அப்போது மயிலாள் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேலிடம் விண்ணப்பம் அளித்தார். விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட அலுவலர் சக்திவேல் அதற்கான ஒப்புகைச் சீட்டை அவரிடம் வழங்கினார்.
இதன் காரணமாக புங்கார் ஊராட்சி முதல் வார்டில் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்தால் அமுதா என்பவர் வார்டு உறுப்பினராக போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இவருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி அக்டோபர் 12ஆம் தேதி சான்றிதழ் வழங்கப்படும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.