ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சங்கராப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக சின்னதங்கம் என்கிற ராதாகிருஷ்ணன் (49) கடந்த மாதம் 6ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதிமுக பிரமுகரான இவர், இன்று காலை சுமார் 9.30 மணியளவில் அந்தியூர் அருகே உள்ள மூலக்கடை என்ற இடத்தில், இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடையில் தனது வாகனத்தை பழுது பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது கருப்பு நிற ஸ்கார்ப்பியோ காரில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல், திடீரென ராதாகிருஷ்ணனை அரிவாளால் நடுவீதியில் துரத்தி துரத்தி வெட்டியுள்ளனர்.
தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டுப்பட்டு படுகாயங்களுடன் நடுரோட்டில் துடித்துக்கொண்டிருந்த ராதாகிருஷ்ணனை, அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அவசர ஊர்தி மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைப் பெற்று, மேல் சிகிச்சைக்காக ஈரோடு கொண்டு செல்லும் வழியில் ராதாகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த அந்தியூர் காவல் துறையினர், உடனடியாக குற்றவாளிகளைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் காவல் துறை உஷார்படுத்தப்பட்டது. பின்னர், கவுந்தப்பாடி சலங்கபாளையம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடி அருகே வந்த காரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
அப்போது, காரிலிருந்த நான்கு பேரில் இருவர் தப்பி ஓடியுள்ளனர். இருவரை மட்டும் காவல் துறையினர் பிடித்துள்ளனர். மேலும், கொலைக்கு பயன்படுத்திய ஸ்கார்ப்பியோ காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதற்கிடையே ஊராட்சி மன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன் உடலை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. அங்கு அவர்களது உறவினர்கள், கட்சியினர் என 500க்கும் மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டனர்.
மேலும், ராதாகிருஷ்ணன் என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் தேர்தல் விரோதத்திற்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்தும் காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ராதாகிருஷ்ணன் ஏற்கனவே பல அடிதடி, கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டு விடுதலை ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிஆர்பிஎப் வீரர்கள் இடையே மோதல்; 6 குண்டுகளைத் தலையில் வாங்கி வீரர் உயிரிழப்பு