ஈரோடு: அழிந்து வரும் பனை மரங்களை காக்க வலியுறுத்தி, கோபிசெட்டிபாளையம் அருகே கூத்தாண்டவர் கோயில் பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடும் நிகழ்ச்சியில், பனை ஏறும் தொழிலாளர்கள் பனைமர உபகரணங்களுடன் கம்பத்து ஆட்டம் ஆடி வழிபாடு செய்தனர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் புதுசூரிபாளையத்தில் அமைந்துள்ள மாகாளியம்மன், முத்துமாரியம்மன் மற்றும் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவானது நேற்று (டிச.25) பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முன்னதாக, கோயில் திருவிழாவை முன்னிட்டு புதுசூரிபாளையம், மூனாம்பள்ளி, நம்பியூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
நம்பியூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெரும்பாலானோர் பனைமரம் ஏறும் தொழில் செய்து வருகின்றனர். கூத்தாண்டவர் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட பனைமரம் ஏறும் தொழிலாளர்கள் காப்புக் கட்டி விரதம் இருப்பதோடு, நாள்தோறும் இரவு பனைமரம் ஏறும் உபகரணங்களுடன், கோயில் முன்பு பக்தி பரவசத்துடன் ஆடி, வழிபாடு செய்து வருகின்றனர்.
கோயில் திருவிழாக்களில் பொதுமக்கள், குழந்தைகள் கலந்து கொண்டு ஆடி வழிபாடு செய்து வரும் நிலையில், அழிந்து வரும் பனை மரங்களை காப்பாற்ற பனை ஏறும் தொழிலாளர்கள், பனைமரம் ஏறும் உபகரணங்களுடன் கம்பத்து ஆட்டம் ஆடியது, கிராம மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கற்பகதரு என்று அழைக்கப்படும் பனை மரம், தமிழக அரசின் அரசு மரமாக இருந்தாலும், தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பனை மரங்களை அழிவில் இருந்து காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொழிலாளர்கள் உபகரணங்களுடன் கோயில் திருவிழாவில் கம்பத்தின் முன்பு ஆடி வழிபாடு செய்தனர்.
இதையும் படிங்க: கார் டயர் வெடித்து இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்!