ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையிலிருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்கால்களுக்கு கடந்த மாதம் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கோபிசெட்டிபாளையம் அந்தியூர், பவானி தாலுகாக்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நேரடி பாசனமும், சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மறைமுக பாசனமும் பெற்று பயனடைந்துள்ளன.
தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப்பகுதிகளில் நெல் விதைப்பு மும்மரமாக நடைபெற்றுவருகிறது. இதில் கூலியாட்கள் பற்றாக்குறையினால் பெரும்பலான விவசாயிகள் இயந்திர நெல் நடவிற்காக இயந்திரத்தில் நாற்றுப்பண்ணை அமைத்துவருகின்றனர்.
இந்நிலையில் கூகலூர் பகுதி விவசாயி சரவணராஜ் என்ற விவசாயி கருங்கரடு பகுதியில் இருக்கும் தனது 5 ஏக்கர் நெல் வயலில் நேரடி நெல் விதைப்பை தொடங்கியுள்ளார். இதனால் விதை நெல், ஆட்கள் கூலி, தண்ணீர்,நேரம் ஆகியவை சேமிப்பு ஆவதாகவும் மகசூலும் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். நேரடி நெல் விதைப்பிற்கு 12 கிலோ விதை நெல் இருந்தால் போதுமானது எனவும் அதுவே பயிர் நடவிற்கு ஏக்கர் ஒன்றுக்கு 20 முதல் 21 கிலோ விதை நெல் தேவைப்படும் அதனால் விதை வெகுவாக குறைவதால் விதை நெல்லிற்கான செலவும் குறைகிறது.
அதேபோல் பயிர் நடவு முறைக்கு நாற்றங்கால் அமைந்து நாற்றுகளை பறித்து நடவு செய்யும்போது ஆட்கள் கூலி ஏக்கர் ஒன்றுக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் செலவு ஆகும். ஆனால் நேரடி நெல் விதைப்பின் மூலம் இப்பணிகள் ஏதுமின்றி நேரடியாக நெல் விதைப்பு செய்வதால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வரை சேமிப்பு ஆகிறது. அறுவடைக்கும் குறைந்த நாட்களே ஆகும். அதனால் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் வெகுவாக குறையும் என்றார்.
மேலும், கடந்த முறை நேரடி நெல் விதைப்பின் மூலம் ஏக்கர் ஒன்றுக்கு 40 மூட்டைகள் முதல் 50 மூட்டைகள்வரை நெல் அறுவடை செய்ததாகவும் அதனால் மகசூலும் அதிகரித்துள்ளதாகவும் சரவணராஜ் தெரிவித்தார்.