ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாரத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடிசெய்யப்பட்டது. தற்போது அறுவடை நிறைவடைந்து நெல்மூட்டைகள் விற்பனையாகிவருகின்றன. நெல் அறுவடைக்குப்பின் வயல்களில் கிடக்கும் வைக்கோல் கால்நடைகளுக்கு உலர் தீவனமாகப் பயன்படுகிறது.
சத்தியமங்கலம் வட்டாரத்தில் அறுவடைக்குப் பின்னர் வைக்கோல் சேகரிக்கப்பட்டு கட்டுகளாக மாற்றப்படுகின்றன. பெரும்பாலான இடங்களில் டிராக்டரில் இணைக்கப்பட்ட இயந்திரம் மூலம் வைக்கோல் உருளை வடிவில் கட்டுகளாக உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் 40 கிலோ கொண்ட ஒரு உருளை வைக்கோல் ரூ.140-க்கு விற்கப்பட்டது. தற்போது வைக்கோலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 140 லிருந்து 240 ரூபாயாக உயர்ந்துள்ளது.
விலை உயர்வுக்கு காரணம்?
டெல்டா மாவட்டங்களில் மழை காரணமாக பயிர்கள் மூழ்கியதால் கால்நடைத் தீவனமாக உள்ள வைக்கோல் விலை உயர்ந்துள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு 35 கட்டுகள் கிடைப்பதால் வைக்கோல் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.7500 வரை வருவாய் கிடைப்பதாக உழவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொள்முதல் செய்யப்படும் வைக்கோலைக் கொண்டு காளான் உற்பத்தி மற்றும் கர்நாடகத்தில் தீவனமாகப் பயன்படுத்துவதால் வாகனங்கள் மூலம் பிற இடங்களுக்குச் செல்கின்றனர்.
தற்போது தேர்தல் நடைமுறை அமலில் உள்ளதால் வைக்கோல் வாங்குவதற்குச் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் வாங்கி உரிய ஆவணங்களுடன் வியாபாரிகள் எடுத்துச் செல்கின்றனர்.
இதையும் படிங்க:குன்னூரில் அகற்றப்படாமல் இருக்கும் கட்சி போஸ்டர்கள்!