ஈரோட்டில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, முன்னாள் மாணவராக பங்கேற்றார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களவைத் தேர்தலின் போது தமிழ்நாட்டு எதிர்கட்சிகள் ஆளும் கட்சியின் மீது பொய் பரப்புரையை மேற்கொண்டதே அதிமுகவின் தோல்விக்கு காரணம். எனினும் அடுத்து நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றிபெறும் என்றார்.
மேலும் அவர், மே 27ஆம் தேதி காற்றாலை மின் உற்பத்தியில் ஏற்பட்ட பழுது காரணமாக 100 மெகாவாட் உற்பத்தி குறைந்தது. எனினும் அந்த பிரச்னை அனல் மின் உற்பத்தி மூலம் சரி செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் தேவையான 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே மக்களிடம் பொய் பரப்புரையை செய்து வருகின்றனர். இருப்பினும் தமிழ்நாட்டில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக அவர் தெரிவித்தார்.