தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரம் பேர் கரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதேபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான மதுபானக் கடைகளை மூடவும் உத்தரவிட்டது.
இந்நிலையில் அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டு 45 நாள்களுக்கும் மேலாகிய நிலையில், அண்டை மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதால், தமிழ்நாடு அரசும் நேற்று முதல் மதுபானக் கடைகளை கட்டுபாடுகளுடன் திறக்க உத்தரவிட்டுள்ளது.
இதனால் மதுபானக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தினர். அதன் ஒரு பகுதியாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் உத்தரவின் பேரில், அக்கட்சியின் மாநில தலைமை அலுவலகமான ஈரோடு சம்பத் நகரில், கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் சூரிய மூர்த்தி, பொருளாளர் பாலு உள்ளிட்ட பொறுப்பாளர்கள் சட்டையில் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் வீட்டில் பாதுகாப்பு பணியிலிருந்த காவலருக்கு கரோனா!