ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோயிலில் ரூ. 3.75 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மின் வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தையும், கோசணம் கடசெல்லிபாளையத்தில் ரூ.10.61 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட துணை மின் நிலையத்தையும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
மின் நிலையத்தினால் உழவர்கள், நெசவாளிகள், தொழிற்சாலைகள் என சுமார் 15000க்கும் மேற்பட்டோர் பயனடைவர். இந்தத் துணை மின்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளதால் மின்பாதையில் ஏற்படும் மின் இழப்பு ஆண்டு ஒன்றுக்கு 6.9 லட்சம் யூனிட்கள் சேமிக்கப்படுவதுடன் இதனால் ஏற்படும் வருவாய் இழப்பு ரூ.1.16 கோடி ரூபாய் சேமிக்கப்படுகிறது.
இந்தத் துணை மின்நிலையம் புதியதாக தொடங்கப்பட்டுள்ளதால் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள கடசெல்லிபாளையம், சூரியம்பாளையம், புதுப்பாளையம், கோசணம், ஆலாம்பாளையம், காந்திபுரம், மேட்டுப்பாளையம் ஆகிய கிராமப் பகுதிகளுக்கு சீரான, தரமான மின் விநியோகம் செய்யப்படும்.
முன்னதாக, கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோயிலில் ரூ. 3.75 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கோபிசெட்டிபாளையம் மின் பகிர்மான வட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தையும் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் திறந்துவைத்தார்.