ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கொங்கர்பாளையம் தொடங்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற கடன் வழங்கும் விழாவில் 44 பயனாளிகளுக்கு 43 லட்ச ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கினார்.
அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "கொடிவேரி அணையை சுற்றுலா தலமாக மாற்ற நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான் பணிகள் விரைவில் தொடங்கப்படும். அதேபோல சுற்றுலா பயணிகள் வன விலங்குகளை காண்பதற்கு தொலை நோக்கு கருவிகள், குண்டேரிப்பள்ளம் அணையில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும்.
விளாங்கோம்பையில் உள்ள பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மேலும் அவர் கூறுகையில், "விவசாய பயிர்களை பாதுகாப்பாக வைக்க குளிர்பதன கிடங்கு கோபிசெட்டிபாளையத்தில் அமைக்கப்படும். பவானி-சத்தியமங்கலம் நான்கு வழிச்சாலை திட்டம் 6 வாரத்தில் தொடங்கப்படும். மேலும் வகுப்பறை திறக்கப்படாவிட்டாலும் மாணவர்கள் எதிர் காலத்தை மனதில் கொண்டு க்யூஆர்(QR) கோடு மூலம் பாடம் கற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் உயர்தர ஆய்வகம், இணையதள வசதி செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் எளிதில் கற்க முடியும். தற்போதுள்ள சூழலில் குழந்தைகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் போது கண்பார்வை பாதிக்கப்படாதா? என பெற்றோர்கள் கேள்வி எழுப்பியதால்தான் 14 தொலைக்காட்சிகள் மூலம் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'கரோனா தாக்கம் குறைந்தால்தான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்'