ஈரோடு: திண்டல் அடுத்த மாருதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 69). இவர் திண்டலில் இருந்து வில்லரசம்பட்டி செல்லும் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பு எதிரில், இஸ்திரி கடை நடத்தி வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு கடந்த நான்கு வருடங்களாக சென்று துணிகளை பெற்று இஸ்திரி செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளார்.
இந்நிலையில் தனது கடைக்கு எதிரே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள, நான்காவது மாடியில் வசிக்கும் ரவீந்தர் என்பவரது வீட்டிற்கு துணி வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது துணிகளை வாங்கி கொண்டு கீழே வருவதற்காக, லிப்ட்டில் ஏற முயன்ற போது, எதிர்பாராத விதமாக தவறிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தாலுகா காவல்நிலைய போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் உதவியுடன், சுப்பிரமணியத்தின் உடலை மீட்டு, உடற்கூராய்விற்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் லிப்ட் இருந்த போது, 4 மாடியில் கதவு திறக்கப்பட்டதால், லிப்ட் இல்லாததைக் கவனிக்காமல் உள்ளே சென்ற சுப்பிரமணி கீழே தவறி விழுந்து உள்ளார். பின்னர் லிப்ட் கம்பிகளில் சிக்கிக் கொண்ட அவர் மேலே ஏற முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அப்போது திடீரென லிப்ட் இயங்கியதாதல் சுப்பிரமணியின் இடது கை லிப்டின் இடுக்கில் சிக்கி, துண்டான நிலையில் உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. குடியிருப்பு பகுதியில் துணிகளை பெற வந்த இஸ்திரி தொழிலாளி லிப்டில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.