தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோட்டில் உள்ள பெரியார் நினைவு இல்லத்தில் பெரியாரின் திருஉருவச் சிலைக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன் பின்னர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த 45 பேருக்கு 1 கோடி ரூபாயில் கடன் உதவிகளை அமைச்சர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் கரோனா நெருக்கடி காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பருவநிலை பாடத்திற்கான பாடப் புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் வழங்கப்படும்' எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 'ஆன் லைன் வகுப்புகளைப் பொறுத்தவரையில் உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி மாணவர்களின் நலன்கருதி 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இருமொழிக்கொள்கை தான்' எனவும் உறுதியாகத் தெரிவித்தார்.
தனியார் பள்ளிகள் முழுமையாகக் கட்டணம் வசூலிப்பதாக எழுந்தப் புகாரில் இதுவரை 14 பள்ளிகள் மீது பள்ளிக்கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள் அளிக்கும் பதிலைக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கட்டணத்தைப் பொறுத்தவரை சிபிஎஸ்சி உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் இந்த கட்டண முறை பொருந்தும் என்றும் அமைச்சர் கூறினார்.
பள்ளியை திறப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கனவே கூறியது போல பெற்றோர்கள் மாணவர்கள் மனநிலை, கரோனோவின் தாக்கத்தை கருத்தில் கொண்டு தான் முடிவு செய்யப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'தமிழ்நாட்டில் அதிமுகவை அசைக்க முடியாது' - அமைச்சர் செங்கோட்டையன்