நாடு முழுவதும் கரோனா தொற்றானது வேகமாகப் பரவிவருகிறது. ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 80 நாள்களாக தொற்று பாதிப்பு இல்லாத நிலையில், கடந்த சில நாள்களாக சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து வந்தவர்களால் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைக் குறைத்திடும் வகையிலும், வெளிமாவட்டங்களிலிருந்து வருவோரைக் கட்டுப்படுத்தும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை உள்பட மற்ற மாவட்டங்களிலிருந்து ஈரோடு மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் எந்த வாகனங்களையும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்டக் காவல் துறை எச்சரித்துள்ளது.
அதேபோல் பொதுமக்கள் யாரும் முகக்கவவசம் இன்றி வெளியில் வரக்கூடாது என்றும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருப்பதால் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பபட்டுள்ளது.