ஈரோடு கடைவீதிப் பகுதியில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறிச் சந்தை மிகவும் குறுகலாகவும், நெருக்கடியாகவும் இருந்த காரணத்தினால் தற்காலிகமாக பேருந்து நிலையத்திற்கு இடம் மாற்றப் பட்டு கடந்த மூன்று மாதங்களாக பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்தது.
இதனிடையே கடைவீதியில் அமைந்துள்ள தினசரி காய்கறிச் சந்தைக் கடைகள் ஸ்மார்ட சிட்டித் திட்டத்தின் கீழ் இடித்து புதிதாக கட்டப்படவுள்ளது. இதனையடுத்து ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதான வளாகத்தில் மாநகராட்சியின் சார்பில் சுமார் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தற்காலிக காய்கறிச் சந்தை அமைக்கபட்டது.
பொதுமக்கள், வியாபாரிகளுக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகள் உள்பட் அனைத்து வசதிகளையும் கொண்ட நவீன காய்கறிச் சந்தையாக கட்டி முடிக்கப்பட்டது. 700 காய்கறிக் கடைகள், பழக்கடைகளுடன் தொடங்கப்பட்டுள்ள புதிய தற்காலிக தினசரி காய்கறிச் சந்தையில் கடைகள் அமைப்பதற்கு வியாபாரிகளுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு பேருந்து நிலையத்தில் காய்கறிச் சந்தை செயல்பட்டு வந்த போது காய்கறி வியாபாரி ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடந்த 10 நாள்களாக காய்கறிச் சந்தைக்கு பொதுமக்கள், சில்லறை வியாபாரிகள் அனுமதிக்கப்படாமல் மொத்த வியாபாரிகள் மட்டும் வந்து செல்லும் வகையில் அதிகாலை நான்கு மணி முதல் ஏழு மணி வரை மட்டுமே காய்கறிச் சந்தை செயல்படும் நிலையிருந்தது.
அதே நடைமுறை புதிய காய்கறிச் சந்தைக்கும் பொருந்துமா என்பது விரைவில் தெரிவிக்கப்படும் என்று மாநகராட்சித் துறையினர் தெரிவித்திருந்த நிலையில் புதிய காய்கறிச் சந்தையில் ஒதுக்கப்பட்ட பகுதியில் தங்களது கடைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள காய்கறிச் சந்தையில் பொதுமக்களையும், சில்லறை வியாபாரிகளையும் அனுமதித்து இந்தத் தொழிலை மட்டுமே நம்பியுள்ள தங்களை காப்பாற்றிட வேண்டும் என்று காய்கறி வியாபரிகள், பழ வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.