ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நாகர்பாளையத்தில் உள்ள அரசு மாணவியர் விடுதி, கரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாகச் செயல்படவில்லை.
இதையறிந்த ஒருவர், பச்சிளம் குழந்தையை விடுதி வாயிலில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார். இரவு நேரத்தில் விடுதியின் வழியே சென்றுகொண்டிருந்த பிரசாந்த் என்பவர் குழந்தையின் அழுகுரல் கேட்டதையடுத்து விடுதிக்குச் சென்றுள்ளார்.
பிறந்து சில நாள்களே ஆன ஆண் குழந்தை ஒன்று அங்கு வைக்கப்பட்டிருந்ததை அறிந்து, உடனடியாக 108 அவசர ஊர்திக்கு தகவலளித்து குழந்தையை கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை பிறந்து மூன்று நாள்களே இருக்கும் எனவும், குழந்தை நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
பின்னர், இது குறித்து தகவறிந்த கோபிசெட்டிபாளையம் காவல் துறையினர், குழந்தையின் பெற்றோர் யார், எதற்காகக் குழந்தையை விட்டுச்சென்றுள்ளனர். திருமணத்தை தாண்டிய உறவால் பிறந்த குழந்தையா அல்லது திருமணத்திற்கு முன்பு பிறந்த குழந்தையா என்ற கோணத்தில் விசாரித்துவருகின்றனர்.
மேலும், யாரேனும் இக்குழந்தை குறித்த தகவலறிந்திருந்தால் காவல் துறையினரிடம் தெரிவிக்குமாறும் கூறினர்.
இதையும் படிங்க: ஆதரவற்ற குழந்தைகளின் தாய் திருநங்கை நூரி சலீம்!