ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மாலைப்பாதை உள்ளது. இதன் வழியாக தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகத்துக்கும் அங்கிருந்து தமிழ்நாட்டிற்கும் இருசக்கர வாகனங்கள், கார், பஸ், லாரி, சரக்கு வாகனம், கனரக வாகனங்கள் போன்றவை சென்றுவருகின்றன. திம்பம் மலைப்பாதையில் தினந்தோறும் ஆயிரக்கண்ககான வாகனங்கள் பயணிக்கின்றன.
இங்கு அதிக பாரம் ஏற்றி வரும் சரக்கு லாரிகளை கட்டுப்படுத்த பண்ணாரி மற்றும் காரப்பள்ளம் இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சோதனைச்சாவடிகளை தாண்டி அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்த நெல்பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோவை சென்றுக்கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதை ஒன்றாவது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது அதிக பாரம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ரோட்டின் தடுப்புசுவரை உடைத்துக்கொண்டு மலைசரிவின் மரத்தின் மீது மோதி நின்றது.
உடனே ஓட்டுநர், உதவியாளர் லாரியில் இருந்து வெளியே குதித்தனர். இதனால் அவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.