ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி அலுவலகத்தில் பழங்குடியின மக்களின் குறைதீர் முகாம் திங்கள்கிழமை (இன்று) நடைபெற்றது. இதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் எல்.முருகன் தலைமை வகித்தார். இதில், காவல்துறை கண்காணிப்பாளர் சக்திகணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, அனைத்து வங்கி அதிகாரிகள் மற்றும் அனைத்து அரசுதுறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த முகாமுக்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட பழங்குடியினர் பங்கேற்றனர்.
அதில், வங்கி கடன் தராமல் அலைகழிப்பதாக வங்கி அதிகாரிகள் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் வீட்டுமனை பட்டா, கழிப்பறை போன்ற கோரிக்கைகள் மனுக்கள் பெறப்பட்டன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் எல், முருகன் பேசுகையில்,
தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, கோவை பகுதியில் 95 சதவீதம் மக்கள் மத்திய அரசின் திட்டங்களை பெற்றுள்ளனர். பஞ்சமி நிலம் மீட்பு குறித்து கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 11-ம் தேதி இது குறித்து கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
எஸ்சி,எஸ்டி வழங்குகளில் 2016ம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து, 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இரட்டை டம்ளர் முறை குறித்து புகார் வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தீண்டாமை எந்த வடிவில் வந்தாலும் அதனை ஒழிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.