ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. இரு மாநில எல்லைகளை இணைக்கும் இச்சாலையில் தமிழக பகுதியில் ஆங்காங்கே தமிழில் வரவேற்பு பெயர் பலகை மற்றும் மாநில எல்லை ஆரம்பம் போன்ற வரவேற்பு பலகை உள்ளது. சில இடங்களில் தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாளவாடி அடுத்த பைனாப்புரம் அருகே உள்ள எத்திக்கட்டை மலையில் இருமாநில எல்லை அமைந்துள்ளது. இந்த இடத்தில் ஈரோடு மாவட்ட ஊராட்சி வரவேற்பு பலகை மற்றும் நெடுஞ்சாலைதுறை பலகை வைக்கப்பட்டிருந்தது, இந்த பலகைகள் சேதம் அடைந்துள்ளதாக தாளவாடி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் சேதமடைந்த பெயர் பலகைகளை ஆய்வு செய்தனர்.
அதேபோல் சாம்ராஜ்நகர் மாவட்ட ரூரல் காவல் நிலைய ஆய்வாளர் நஞ்சப்பா ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மாநில எல்லையில் உள்ள தமிழ் பெயர் பலகையை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வரவேற்பு பலகை வைக்கப்பட்டுள்ள இடம் கர்நாடக மாநில எல்லைக்கு உட்பட்டது என தெரியவந்துள்ளது. கடந்த வாரம் தமிழ்நாடு - கர்நாடக எல்லை தாளவாடி அடுத்த ராமபுரம் பகுதியில் கன்னட சலுவாலியா கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தமிழ் பெயர் பலகையை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.