ஈரோடு: சிவகிரி அருகே உள்ள அஞ்சோர் அடுத்த முத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மனைவி விஜயலட்சுமி (52). விஜயலட்சுமி , கொடுமுடி ஒன்றியக்குழு முன்னாள் கவுன்சிலர்.
இந்நிலையில், அதிமுக பிரமுகரான விஜயலட்சுமியின் வீட்டின் அருகே இவரது பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீட்டில் நேற்று முன்தினம் (பிப்.11) காலை மர்ம நபர்கள் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதில் பண்ணை வீட்டின் முன்பக்க கதவு தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனையடுத்து, பண்ணை வீட்டில் வேலை செய்யும் ஆறுமுகம் என்பவர் இதுகுறித்து சுந்தரராஜனுக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த சுந்தர்ராஜன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, அங்கு வந்த மலையம்பாளையம் காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து ஈரோடு காவல் கண்காணிப்பாளர், சசிமோகன், பெருந்துறை துணை காவல் கண்காணிப்பாள் சண்முகம் ஆகியோர் விசாரணை நடத்தினார். இதனையடுத்து, மோப்பநாய் பவானி வரவழைக்கப்பட்டு, பெட்ரோல் குண்டு வீசிய இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் பெட்ரோல் குண்டு வீசியதில் சேதமடைந்த பொருட்களைப் பரிசோதனைக்கு எடுத்துச் சென்று சிவகிரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் அதிமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாத்தே நடிகை பரப்புரை!