ஈரோடு: தாளவாடி நகர் பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குரங்குகள் பேருந்து நிலையம் மற்றும் சாலைகளில் அங்கும் இங்கும் நடமாடுகின்றன. இதற்கிடையே நேற்று தாளவாடி பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு மின் கம்பத்தில் ஏறிய குரங்கு, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மின் கம்பத்தில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது.
இதைக் கண்ட தாளவாடி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் முருகன் என்பவர், உடனடியாக மின்வாரிய பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த மின் பணியாளர், மின் கம்பத்தில் ஏறி இறந்த குரங்கின் உடலை மீட்டெடுத்துள்ளார். இதையடுத்து ஊராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள், குரங்கின் உடலை சுடுகாட்டில் புதைத்து அதன் மீது மஞ்சள் தூவி, மாலை அணிவித்து சடங்குகள் செய்து வழிபட்டனர்.
தாளவாடி மலைப்பகுதியில் குரங்குகளை ஆஞ்சநேயர் தெய்வமாக கருதி வழிபடுவதால், இறந்த குரங்கிற்கு சடங்குகள் செய்ததாக ஊராட்சிப் பணியாளர்கள் தெரிவித்தனர். இவ்வாறு இறந்த குரங்கிற்கு சடங்குகள் செய்து அடக்கம் செய்த சம்பவம் தாளவாடி மலைப் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஈரோட்டில் கஞ்சா செடிகள் வளர்ப்பு.. வெவ்வேறு இடங்களில் இருவர் கைது!