ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி அருகேயுள்ள வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கணேசன். இவர் சில வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மனைவி சரோஜா(48). இவர்களுக்கு விக்னேஷ் (27), அருண்குமார் (23) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் விக்னேஷ் ஓட்டுநராகவும், அருண்குமார் பிளம்பராகவும் வேலை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஆகஸ்ட் 4ஆம் தேதி நள்ளிரவில் விக்னேஷ், அருண்குமார் ஆகியோர் மதுபோதையில் வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டில் இருந்த ரூ. 2 ஆயிரத்தை எடுத்து செலவு செய்த தாயை இரண்டு மகன்களும் கண்டித்து உள்ளனர்.
இதில் அவர்களுக்கும், சரோஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மகன்கள் இருவரும், இரும்பு கம்பியை எடுத்து தாயை தாக்கினர். இதில் வலி தாங்க முடியாமல் அலறிய சரோஜாவின் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.
இதையடுத்து, சரோஜாவை இரண்டு மகன்களும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுபோல் நடித்து தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து சென்றனர். இதற்கிடையே மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சரோஜா உயிரிழந்ததால், அவரது உடலை சூரம்பட்டி வலசு மயானத்துக்கு கொண்டு சென்று புதைத்தனர்.
இதுபற்றி தகவலறிந்த சூரம்பட்டி காவல் துறையினர் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 5) மாலையில் சூரம்பட்டி வலசு மயானத்துக்கு சென்று வருவாய்த் துறையினரின் முன்னிலையில் சரோஜாவின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்விற்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சரோஜாவின் உடல் நேற்று (ஆகஸ்ட் 6) உடற்கூராய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 7) தாயின் கொலைக்கு காரணமான விக்னேஷ், அருண்குமார் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கணவருடன் பிரிந்து வாழ்ந்து வந்த பெண் கொலை: குற்றவாளிகளுக்குப் போலீஸ் வலை!