சென்னை பள்ளிக்கரனையில் அதிமுக பிரமுகரின் இல்லத் திருமண நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் நிலைதடுமாறிய இளம்பெண் சுபஸ்ரீ பின்னால் வந்த லாரி மோதியதில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அத்துமீறி வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் குறித்த கேள்வியும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை மீது விமர்சனமும் எழுந்தது.
அதுமட்டுமல்லாது அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பேனர்கள் வைக்கும் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் பேனர் வழக்கில் ஏற்கனவே விதிக்கப்பட்ட உத்தரவுகளை அலுவலர்கள் பின்பற்றுவதில்லை என அதிருப்தி தெரிவித்தது. அதுமட்டுமல்லாது காவல் துறையினருக்கு சரமாறி கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், பேனர் வழக்குகளில் எத்தனைமுறை உத்தரவு போட்டாலும் அரசு அதை முறையாக செயல்படுத்துவதில்லை என்றும், இதனால் அரசின் மீது நீதிமன்றத்திற்கு நம்பிக்கை போய்விட்டது என்றும் கூறினர்.
இந்நிலையில், ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்கா, பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் மற்றும் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
வரவேற்புக்காக வைக்கப்படும் இந்த பேனர்கள் உரிய அனுமதியின்றி உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டால் இதுபோன்ற தேவையற்ற உயிரிழப்புகளை தடுக்கலாம் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.