ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலத்தின் சொந்த கிராமமான தோப்புபாளையம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் அடங்கிய புதிய நகர் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரின் சாதனைகளை நினைவுகொள்ளும் வகையில், இந்த புதிய நகருக்கு ’எடப்பாடியார் நகர்’ என்று பெயர் சூட்டப்பட்டது. நேற்று (ஜூலை 13) பெருந்துறையில் நடைபெற்ற அந்நகரின் திறப்பு விழாவில் எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எனது சொந்த கிராமமான தோப்புபாளையம் செல்லும் வழியில் புதிய நகர் உருவாக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களுக்கு நீண்டகாலமாக குடி தண்ணீர் பிரச்னை இருந்துவந்தது. இதற்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொடிவேரி திட்டத்தில், நாள் ஒன்றுக்கு இரண்டு கோடி லிட்டர் தண்ணீர் கிடைக்கும் வகையில் புதிய திட்டத்தை அறிவித்தார்.
அவரது மறைவிற்குப் பிறகு தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.240 கோடி இதற்காக நிதி ஒதுக்கி, இப்பகுதியில் ஒரு மேல்நிலைத்தொட்டி அமைக்கப்பட்டு கொடிவேரி ஆற்று நீர் இப்பகுதி மக்களுக்கு கிடைக்கும் வகையில், இந்தத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தையும் முதலமைச்சர் செயல்படுத்தியுள்ளார்.
இப்படி, பெண்கள், விவசாயிகளுக்கான மிக முக்கிய தேவையைப் பூர்த்தி செய்த முதலமைச்சரின் பெயரை இந்த புதிய நகருக்கு சூட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் விருப்பப்பட்டனர். மேலும், கரோனாவை கட்டுப்படுத்த சிறப்பான முறையில் செயலாற்றிவரும் முதலமைச்சரின் பெயரை சூட்டுவதில் பெருமை கொள்கிறேன். வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வுப் பணிக்காக ஈரோடு வர உள்ளார். அப்போது, துடுப்பதியில் புதிய மேம்பாலம் கட்டுவது குறித்து அவரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன்" எனத் தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர்களின் பெயரில் அண்ணா நகர், கே.கே. நகர், ஜெ.ஜெ நகர் ஆகியவை உருவாக்கப்பட்டன. அதுபோல், தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரில் புதிய நகர் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ - ஒரே நாளில் நடவடிக்கை எடுத்த எம்எல்ஏ