ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான இறுதி நாள் பிரச்சாரம் இன்று (பிப்.25) மாலை ஆறு மணியுடன் நிறைவடைகிறது. அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.
அதன் ஒருபகுதியாக சம்பத் நகர் பகுதியில் திறந்த வேனில் நின்றவாறு வாக்காளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”திமுக அரசு பொறுப்பேற்றவுடன் தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆனால் தவறான தகவலை சிலர் பரப்பி வருகின்றனர். குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகைக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், வரும் மார்ச் மாதம் வெளியாக உள்ள நிதிநிலை அறிக்கையில் உரிமைத்தொகை ரூ.1000 குறித்து அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார். 'இது ஸ்டாலினின் வார்த்தை, எடப்பாடியின் வார்த்தை அல்ல என்றும் மக்கள் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் சொன்னதை செய்வோம்.. செய்வதைத்தான் சொல்வோம்.. சொல்லாததையும் செய்வோம்' எனவும் 'இது மக்களுக்காகவே பாடுபட்டு கொண்டிருக்கின்ற ஆட்சி' எனவும் பெருமிதம் கூறினார்.
இடைத்தேர்தல் ஒரு எடைத்தேர்தல்: எனவே அப்படிப்பட்ட ஆட்சிக்கு மக்கள் அனைவரும் பக்க பலமாக இருக்க வேண்டுமெனவும், 'இடைத்தேர்தலை ஒரு எடைத்தேர்தலாக பார்க்க வேண்டும்' எனவும் தெரிவித்தார். அந்த எடைத்தேர்தல் என்பது 'நடக்கின்ற ஆட்சி எப்படியிருக்கு, இந்த ஆட்சியில் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேறியதா? என்பதை மக்கள் எடை போட்டு வழங்க வேண்டிய தீர்ப்பு' என்றும்; எனவே, வரும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு 'கை' சின்னத்தில் தான் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஏற்கனவே, ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாக பேசிய அவர், இங்கு 'திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சமீபத்தில் இரண்டு நாட்கள் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது, 50,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடி தர வேண்டும் என்று கூறியிருந்தார் என்றும்; ஆனால், மக்கள் அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவிற்கு முழு ஆதரவுடன் கை சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டும்' என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 'ஈரோட்டில் தேர்தல் விதிமீறல்கள் அப்பட்டமாக நடைபெறுகிறது' - எடப்பாடி பழனிசாமி பகிரங்க குற்றச்சாட்டு