ஈரோடு: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, இந்திய கம்யூ கட்சி, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம்,தேமுதிக உள்ளிட்ட ஆறு கட்சிகள் போட்டியிடுகின்றன. பவானிசாகர் தொகுதியில் 374 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தனர்.
முகக்கசவம் அணிந்து வரும் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன்பாக வெப்பநிலை பரிசோதனை செய்து, கையுறை, கிருமி நாசினி ஆகியவை வழங்கப்படுகின்றன. கடம்பூர், தாளவாடி, கேர்மாளம் மலைக்கிராமங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். முதியோர்கள் பலர் வாக்களிக்க பிரத்யேக சக்கர நாற்காலி, மிதிவண்டியில் ஆகியவற்றில் வந்தனர். முதல் தலைமுறை வாக்காளர்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் வெயில் குறைவாக இருப்பதால் முதியோர்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டினர்.
பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் 20 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அதில் 7 வாக்குச்சாவடிகளில் மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறின்போது மாற்று ஏற்பாடு செய்வதற்கு கடம்பூர், ஆசனூர் மற்றும் தாளவாடி, சத்தியமங்கலம் , பவானிசாகர் புளியம்பட்டியில் ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
அதேபோல், அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள 86 எண் கொண்ட வாக்குச்சாவடியில் 9.30 மணியளவில் மின்னணு வாக்கு செலுத்தும் இயந்திரம் பழுதானதால் வாக்கு செலுத்த வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஒரு மணி நேரத்திற்குள் வேறொரு மின்னணு வாக்கு இயந்திரம் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்த பிறகு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.
இந்த வாக்குச்சாவடியை ஈரோடு மாவட்டம் வருவாய் அலுவலர் முருகேசன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் வந்து பார்வையிட்டு மற்றொரு மின்னணு வாக்கு இயந்திரத்தை பொருத்த உத்தரவிட்டு சென்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் ஒன்பதாவது முறையாக போட்டியிடும் கே.ஏ.செங்கோட்டையன் தனது சொந்த கிராமமான குள்ளம்பாளைம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து திட்டங்ளும் நிறைவேற்ற நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக கருதுகிறோம் என்றார்.
பின்னர் கோபிசெட்டிபாளையம் ஜெயராம் நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் சிட்கோ வாரியத்தலைவர் சிந்து ரவிச்சந்திரன் தனது வாக்கினை பதிவு செய்தார். கோபி திமுக வேட்பாளர் மணிமாறன், பவானிசாகர் அதிமுக வேட்பாளர் ஏ.பண்ணாரி, பனையம்பள்ளி சிபிஐ வேட்பாளர் பி.எல்.சுந்தரம் ஆகியோரும் வாக்களித்தனர்.