ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கெட்டிசெவியூர், அயலூர் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க கட்டடங்களையும், வெள்ளாளபாளையம் ஊராட்சியில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி சங்க புதிய கட்டடத்தையும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார்.
வெள்ளாளபாளையம் கூட்டுறவு வங்கியின் மூலம் சுமார் 86 லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிர்க்கடன், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசியபோது, "தமிழ்நாடு சுகாதாரத் துறை கரோனா வைரஸ் (தீநுண்மி) காலங்களில் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இதற்காகப் பிரதமர் முதலமைச்சரைப் பாராட்டியுள்ளார். மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் 7.5 விழுக்காடு மருத்துவ இட ஒதுக்கீடு விரைவில் நிறைவேற்றப்படும். அதில் அரசுப் பள்ளியில் 303 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் 7.5 இட ஒதுக்கீடு சட்டத்தை காலதாமதமின்றி அனுமதி வழங்க வேண்டுமென கூறியதற்கு, கருத்து தெரிவித்த செங்கோட்டையன், "மாணவர்களுக்காக பேசும் யாரும், எந்த மாநிலத்திலும் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு பெறும் சட்டத்தை இயற்றவில்லை. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதிமுக அரசு மட்டுமே நிறைவேற்றியுள்ளது இது ஒரு வரலாறு" எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.