தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு, ஈ.எம்.ஆர். ராஜா, தனியரசு, சிவசுப்பிரமணி, ஈஸ்வரன், அரசின் வணிகவரித் துறை முதன்மை செயலர் பாலச்சந்திரன் இவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கதிரவன் கலந்துகொண்டு நிதியுதவிகளை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில்,
”ஈரோடு மாவட்டத்தில் 90 விழுக்காடு வளர்ச்சிப் பணிகள் முடிவடைந்திருக்கின்றன. புதிய திட்டங்கள் கொண்டுவருவது பற்றி பரிசீலிக்கப்பட்டுவருகிறது. ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் கொண்டுவரப்பட்டது.
நிதி பற்றாக்குறையால் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. நிதி செயலருக்கு இதற்காக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நிதி பெற்றதும் பயோ மெட்ரிக் தொடக்கப் பள்ளிகளில் கொண்டுவரப்படும்.
ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணிணி என்ற முறையில் படிப்படியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதுவரை 28 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவிற்கு நிதிக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும் நீட் தேர்வு பயிற்சியை பொறுத்தவரை நீட்டாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என்றார்.
இதையும் படியுங்க: அமராவதி போராட்டம்: பத்திரிகையாளர்கள் மீது போலி கேஸ் போட்ட போலீஸ்!