ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார். அங்கு மாணவர்களுடன் இணைந்து அமைச்சர் கைப்பந்து விளையாடி மகிழ்ந்தார்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஒவ்வொரு ஊராட்சியிலும் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். இளைஞர்களின் உடல் நலத்தை பாதுகாக்க இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முன்பு கிராமங்களில் கபாடி விளையாட்டுதான் முக்கிய விளையாட்டாக இருந்தது. ஆனால் அது தற்போது கிரிக்கெட்டாக மாறியுள்ளது என்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், ஐந்து, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் சாதிச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டுமென எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. பசுமை தீர்ப்பாயத்தின் வேண்டுகோளை ஏற்று மாணவர்கள் பயன்படுத்திய புத்தகங்களை திரும்பப்பெற்று அதனை பாதுகாப்பாக வைத்து மீண்டும் பயன்படுத்தும் வழிமுறைகளை எவ்வாறு செயல்படுத்துவது என முதலமைச்சருடன் ஆலோசித்து வருகிறோம்.
கொடிவேரி தடுப்பணை அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி பத்து உடை மாற்றும் அறைகள், குளிக்குமிடத்தில் கம்பி தடுப்புகள் அமைக்கப்படும். கொடிவேரி அணைக்கு செல்லும் சாலையும் விரிவாக்கம் செய்யப்படும். செயல்படாமல் உள்ள ஊராட்சி சேவை மையங்கள் விரைவில் செயல்படத்தொடங்கும். அது குறித்து முதலமைச்சர் நல்ல அறிவிப்பை வெளியிடுவார் எனத் தெரிவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கோட்டாட்சியர் ஜெயராமன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.