ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த தூக்கநாயக்கன்பாளையம் வன சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் விளாங்கோம்பை வனக்கிராமம் உள்ளது. பழங்குடியின மக்கள் வசிக்கும் இக்கிராமங்களில் சுமார் 325 பேர் வசித்து வருகின்றனர்.
விளாங்கோம்பை கிராமத்துக்கு அடர்ந்த காட்டுப்பகுதியில் குண்டேரிப்பள்ளம் நீர்வழிப்பாதையை கடந்து வனப்பாதையில் 7 கிலோமீட்டர் தூரம் நடைபாதையாக செல்ல வேண்டும். குழந்தைகள் படிக்க வேண்டுமெனில் 10 கி.மீ. தூரம் வினோபா நகர் பள்ளிக்கு நடந்து சென்று மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவேண்டும்.
இதற்கிடையே திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்பராயன் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஜீப்பில் சென்று மலைவாழ் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பழங்குடியினர் பாரம்பரிய முறைப்படி சுப்பராயனுக்கு மலர்மாலை அணிவித்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து மக்களவை உறுப்பினர் சுப்பராயன் மக்களின் குடியிருப்புகளைப் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தொகுதியில் மலைவாழ் மக்கள் படிக்கமுடியாத நிலையில் ஓர் ஆரம்பப்பள்ளி கூட இல்லாமல் இருக்கிறது. சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கல்விக்கூடம் இல்லாமல், ரேசன் பொருள்கள் வாங்க 10 கிமீ தூரம் செல்ல வேண்டியது மிகவும் வேதனைக்குரியது" என்றார்.
இதையும் படிங்க: அரசாங்க பணம் எப்படி வீணாகிறது பாருங்கள்’- கிராம மக்கள் குற்றச்சாட்டு!