ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாய், தடப்புள்ளி அரக்கன் கோட்டை கால்வாய், காளிங்கராயன் கால்வாய் மூலம் விவசாயிகள் பாசனம் பெற்று வருகின்றனர். இதில் கீழ்பவானி கால்வாய் மூலமாக ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் 2 லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் வரை விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த பத்தாம் தேதி அன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு பகுதியில் கீழ்பவானி பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக தண்ணீர் விவசாயிகளின் விலை நிலங்களுக்கு உள்ளே சென்று பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து கிழ்பவானி கால்வாயில் தண்ணீர் உடனடியாக நிறுத்தப்பட்டு கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வந்தது. தற்போது 14 நாட்களுக்குப் பிறகாக உடைப்பு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
உடைப்பு ஏற்பட்ட பகுதியை திறக்கப்பட்ட தண்ணீர் கடந்து செல்வதை தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று திறக்கப்பட்ட தண்ணீர் 3 நாட்களில் கடை மடை பகுதிக்கு சென்றடையும் என்றார்.
தற்போது விநாடிக்கு ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மாலை 1,800 கன அடி நீர் ஆகவும், நாளை 2 ஆயிரம் கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டு, கிளை மதகுகளில் முழுமையாக தண்ணீர் விநியோகிக்கப்படும். கீழ்பவானி கால்வாயில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கூடுதல் நாட்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க:Christmas Eve: தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்வு!