ஈரோடு: முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஈரோடு மாவட்டத்துக்கு வந்த முத்தமிழ்த்தோ் எனும் அலங்கார பேனா ஊா்தியை தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் மாவட்ட எல்லையான கருங்கல்பாளையத்தில் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, "கலைஞரின் 100வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அரசு பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சி சார்பிலும் போராடு காலம் கொண்டாடப்படுகின்றது. இதன் மூலம் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. கட்சியிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோடிக்கணக்கான மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
இன்றைக்கு இந்த வாகனம் ஈரோட்டிற்கு வருகை புரிந்துள்ளது. இதில் கலைஞர் எழுதிய நூல்கள், பயன்படுத்திய பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கலைஞர் எழுதிய எழுதினால் நாட்டில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சினரும் கூறுகின்றனர்.
பண்டிகை காலங்களில் கூடுதலாக மது விற்பனையாகின்றது. இதற்காக கூடுதலாக எந்த ஏற்பாட்டையும் அரசு செய்வது இல்லை. மக்கள் மகிழ்ச்சிக்காக மதுவை குடிக்கின்றனர். விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்ற திட்டம் அரசுக்கு ஒருபோதும் கிடையாது. இந்த பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள். இதிலிருந்து விடுபடுவதற்கு அனைத்து மாவட்டங்களில் கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது.
டெட்ரா பேக் வேறு மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது. அதில் விவசாயிகளுக்கு சில நன்மைகள் உள்ளது. இதுகுறித்து ஆய்வில் இருக்கிறது. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளிவரும். மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி 500 கடைகள் குறைக்கப்பட்டுள்ளது. உடனடியாக அனைத்து கடைகளும் மூடப்பட்டால் பல்வேறு பிரச்சினைகள் வரும். எனவே மது பழக்கம் உடையவர்களை மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் ஒரு நல்ல தீர்வு ஏற்படும்" என்று தெரிவித்தார்.