விடுதலைப் போராட்ட வீரர் பொல்லான் நினைவு நாளன்று, தமிழ்நாடு அரசு சார்பில் மூன்றாம் ஆண்டாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (ஜூலை 17) ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சமுதாயக் கூடத்தில் அமைச்சர்கள் சு. முத்துசாமி, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் பொல்லானின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து சு. முத்துசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "பொல்லானின் நினைவு நாளையொட்டி இன்று அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சென்று மரியாதை செலுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மு.க. ஸ்டாலின் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பலருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை நோக்கித்தான் நாங்கள் ஒவ்வொரு அடியையும் எடுத்துவைத்துக் கொண்டிருக்கிறோம், இன்றைய நாள் அரசு விழாவாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் டிசம்பர் 28ஆம் தேதியன்று பொல்லான் பிறந்தநாள் விழாவன்று தமிழ்நாடு அரசின் சார்பில், அரசு விழாவாகக் கொண்டாட இருக்கின்றோம்.
அதற்குள்ளாக விடுதலைப் போராட்ட வீரர் பொல்லானின் மணி மண்டபத்திற்கான சிலை அமைப்பதற்காக அடிப்படை ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எங்களுக்கு வலியுறுத்தி கூறியுள்ளார்கள்.
இந்த அடிப்படை ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருந்து அதற்கான பணிகளைச் செய்யவுள்ளோம். மேலும் இந்த ஏற்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: சேலத்தில் கோலாகலமாக நடந்த ஆடி தேங்காய் சுடும் திருவிழா!