ஈரோடு: ஈரோடு மாவட்டம், பவானி அடுத்துள்ள தொட்டிபாளையம் கிராமத்தில் நடைபெற்ற 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' யாத்திரை நிகழ்ச்சியில் மத்திய ஜல்சக்தி மற்றும் பழங்குடியினர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் துடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் துடு பேசுகையில், “'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' யாத்திரை நிகழ்ச்சியில் மத்திய அரசின் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். ஆனால், மாநில அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள வில்லை, அவர்களும் கலந்து கொள்ள வேண்டும்.
மத்திய அரசு நிதி அனைத்து திட்டங்களிலும் 60% சதவீதமும், மாநில அரசு நிதி 40 சதவீத பங்களிப்பு உள்ளது. எனவே, மத்திய மாநில அரசு அதிகாரிகள் இதில் கலந்து கொள்ள வேண்டும். உதாரணமாக ஆவாஸ் யோஜனா பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசு நிதி 60 சதவீதமும் மாநில அரசு நிதி 40 சதவீதமும் வழங்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என பிரதமர் ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இத்திட்டத்திற்கு, மத்திய அரசில் இருந்து 100% நிதி மாநில அரசுக்கு வழங்கப்பட்டு விட்டது. ஆனால், மாநில அரசு அதிகாரிகஈள் பயனாளியிடம் பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் வரை பெற்றுக் கொண்டு வருகின்றனர். இது மிகவும் வருத்தத்துக்குரிய செயல்.
'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' யாத்திரை நிகழ்ச்சி நவம்பர் 15ஆம் தேதி தொடங்கி ஜனவரி 24ஆம் தேதி வரை நடைபெறும். மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் பட்டிதொட்டி வரை கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம், அனைத்து மக்களும் இதில், பயனடைய வேண்டும் அப்பொழுது தான் 2047ஆம் ஆண்டு வளர்ச்சி அடைந்த இந்தியாவாக உருவாகும்.
நாம் சுதந்திரம் அடைந்து நூறாவது ஆண்டான 2047ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதம் வேண்டும் என்பதற்காக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு பல்வேறு திட்டங்களை பிரதமர் செயல்படுத்தி வருகிறார். கல்வியில் 2014ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் வாயிலாக அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் பெண்களின் முன்னேற்றம், நாட்டின் முன்னேற்றம் என பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனை அனைத்து, பெண்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு கௌரவ நிதி உதவி திட்டம், மண்வள அட்டை திட்டம், சொட்டு நீர் பாசன திட்டம், பயிர் காப்பீடு திட்டம் என ஏராளமான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது.
இவற்றை, விவசாயிகள் அறிந்து கொள்ளவில்லை. இதனை அறிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். அதனால், அவர்களுக்கு ஏழை எளிய மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கி வருகிறார். ஏழைகளுக்காகவே விக்சல பாரத் சங்கல்ப யாத்ரா என்ற நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம், மத்திய அரசின் திட்டங்கள் மக்களின் வீடுகளுக்கு தேடி வருகின்றது. இதன் மூலம் மக்கள் அனைவரும் பயனடைய வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை - கி.வீரமணி..